தமிழ்நாடு

”தென்னரசுக்கு 2501 பேர் ஆதரவு”-தேர்தல் ஆணையத்தில் கடிதங்களை சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன்

நிவேதா ஜெகராஜா

இன்று மதியம் 3 மணிக்கு, தென்னரசுக்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் தமிழ்மகன் உசேன் அளித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்த நிலையில், அந்த தொகுதிக்கு வரும் 27.02.2023 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக்கூறி வருவதால், அதிமுக தரப்பில் யார் போட்டியிடுவார்கள் இத்தேர்தலில் என்ற குழப்பம் நிலவி வருகிறது.

இதில் ஏற்கெனவே அதிமுகவின் தலைமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அது தற்போது விவாதத்துக்கு வந்தது. இதற்கிடையே இபிஎஸ் தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்றும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என அறிவித்தனர்.

இருவருமே அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர் என்றே ஓபிஎஸ் - இபிஎஸ் தெரிவித்து வந்தனர். அதனால் அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஆகவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டுமென இபிஎஸ் தரப்பினர் முதலில் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இடைத்தேர்தலில் போட்டியிட இரு தரப்பும் விரும்புவதால், கட்சியின் அவைத் தலைவர், பொதுக்குழுவைக் கூட்டி பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து, அந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினால், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யட்டும்” என்று தீர்ப்பளித்தனர்.

அதன்படி இன்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக `தென்னரசு அவர்களை அதிமுக வேட்பாளராக நிறுத்த சம்மதிக்க என் வாக்கை செலுத்துகிறேன்’ என்று மட்டுமே கூறி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அக்கட்சி அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் படிவம் அனுப்பியிருந்தார். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பற்றிய விவரங்கள் அதில் இல்லை. இதனால் ஓபிஎஸ் கண்டன அறிக்கை வெளியிட்டார்.

இருப்பினும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், தனக்கு கிடைக்கப்பெற்ற தென்னரசு மீதான தீர்மானத்தை எடுத்துக்கொண்டு, அதை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சிவி சண்முகம், இன்பதுரை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தீர்மானத்தை ஒப்படைத்தனர்.

அதில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள உறுப்பினர்களில் 2,665 பேரில் 2,501 பேர் ஆதரவளித்தனர் என்றும், தென்னரசுக்கு எதிராக ஒரு படிவம் கூட அவைத்தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

படிவம் அனுப்பாதவர்கள்: படிவங்களை பெற்று அனுப்பாத உறுப்பினர்கள் – 17, படிவங்களை பெற்று அனுப்பாத ஓபிஎஸ் ஆதரவு உறுப்பினர்கள் – 128, மறைந்த பொதுக்குழு உறுப்பினர்கள் – 15, பதவி காலாவதியான உறுப்பினர்கள் – 2, மாற்றுக்கட்சிக்கு சென்ற உறுப்பினர்கள் – 2 பேர். இவர்களை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்து படிவம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய தமிழ்மகன் உசைன், “முக்கியமான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம். இனி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்” என்றுள்ளார்.