’’நாம் சோர்வடைந்து விட்டோமே தவிர, கொரோனா சோர்வடையவில்லை. ஊரடங்கு நேரத்தில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் அவசியம்’’ என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம், கொரோனா காலம் எப்படியிருந்தது? எப்படி எதிர்கொண்டு இருக்கிறோம்? என்று கேட்டதற்கு, கொரோனா காலம் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், இந்த நாடு அது தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும் அவரிடம் கொரோனா இறப்புகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’’நம்பிக்கை துளிர்விட்டாலும், நாம் இன்னும் கொரோனாவிலிருந்து விடுபடவில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஆரம்பத்திலிருந்த அதே எச்சரிக்கை இன்றும் இருக்கவேண்டும். நாம் சோர்வடைந்து விட்டோமே தவிர, கொரோனா சோர்வடையவில்லை.
பயோடெக் நிறுவன விஞ்ஞானிகளை ஒரு மாதத்திற்கு முன்பே சந்தித்து தடுப்பூசிகள் பற்றி கேட்டேன். சாமானிய மக்களுக்கும் நம்மால் தடுப்பூசி விநியோகிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நமது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி நமது சீதோஷண நிலையில் பாதுகாக்க முடியும். இதுபற்றி ஆஸ்திரேலிய தூதர், பல நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்தாலும் இந்தியா மட்டுமே உலக மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் தடுப்பூசிகளை கொடுக்கமுடியும் என்று கூறிய வார்த்தைகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
இதுவரை 9 தடுப்பூசிகள் தயாராக இருக்கிறது. அவற்றில் 6 தடுப்பூசிகள் 3-ம் கட்ட சோதனையை கடந்துவிட்டது. எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம். அதேசமயம் ஊரடங்கு நேரத்தில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் அவசியம்’’ என்று மக்களுக்கு அறிவுரை கூறினார்.