தமிழ்நாடு

”பிப்.22ல் பெரும்பான்மையை நிரூபியுங்கள்” - நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு

”பிப்.22ல் பெரும்பான்மையை நிரூபியுங்கள்” - நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு

Sinekadhara

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்ரவரி 22இல் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் தமிழிசை, “பிப்ரவரி 22 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் . பேரவை நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி, ரங்கசாமி கூட்டணிக்கு தலா 14 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் ஆளுநர் தமிழிசையின் உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் நாராயணசாமி அரசைப் பொறுத்தவரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10, திமுக எம்.எல்.ஏக்கள் 3, சுயேட்சை ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர் என மொத்தம் 14 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ரங்கசாமிக்கு 7 என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 4 அதிமுக எம்.எல்.ஏக்கள், 3 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரென் பேடி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தெலங்கனா ஆளுநராக இருக்கும் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், வந்த உடனேயே இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து பேசிய அமைச்சர் கந்தசாமி, “பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஆளுநர் இந்த உத்தரவை வெளியிடுவதில் மத்திய அரசின் உள்நோக்கம் இருக்கிறது” என்றார். அதேபோல், “சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், இதனை பழிவாங்கும் நடவடிக்கை என எப்படி கூற முடியும். போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில் தாமாக முன்வந்து பதவி விலகாமல், எங்களை புகார் கூறுவது சரியா. நியமன உறுப்பினர்கள் 3 பேருக்கு வாக்குரிமை இல்லை என ஆளும் கட்சி எப்படி சொல்ல முடியும்?” என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார்.