விஜய் - தமிழிசை சௌந்தரராஜன் pt
தமிழ்நாடு

“ஜனநாயகப்படி ஜனநாயகன் முடிவெடுக்க வேண்டும்..” - விஜய்க்கு தமிழிசை மறைமுக கூட்டணி அழைப்பு

தவெக தலைவர் விஜயை பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்..

Rishan Vengai

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டணிக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கட்சியானது தங்களுடைய முதல் தேர்தலை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்த விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.

தவெக தலைவர் விஜய்

ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் என்று மாநிலத்தில் ஆளும் திமுகவையும், பிளவு வாத அரசியல் கலாச்சாரம் என்று மத்தியில் ஆளும் பாஜகவையும் ஒரே நேரத்தில் விமர்சித்த விஜய், எண்ணித் துணிக கருமம் என்ற வல்லுவனின் வாக்குப்படி, அனைத்திற்கும் தயாராகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.

குறிப்பாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியார், காமராசர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரை தவெகவின் கொள்கை தலைவர்களாக அறிவித்த விஜய், அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என அழுத்தமாக பதிவுசெய்தார். மேலும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என அவர் சொன்ன கருத்து பல அரசியல் தலைவர்களின் வரவேற்பையும் பெற்றது.

தவெக விஜய்

அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக உடன் கூட்டணியை உறுதிசெய்தது அதிமுக. இந்தசூழலில் கட்சியை பலப்படுத்தும் வகையில் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் கைக்கோர்த்திருக்கும் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக அணியாக நுழையும் என தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

இந்தசூழலில் தான் தவெக தலைவர் விஜய்க்கு மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இதுகுறித்து அவர் பேசுகையில், விஜய் தங்களோடு வருவதுதான் பாதுகாப்பு என நயினார் கூறியது எதார்த்தமான உண்மை. ஜனநாயகன், ஜனநாயக முறைப்படி முடிவெக்க வேண்டும் என கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.