தமிழ்நாடு

இஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்

webteam

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார் நிலையில் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், “சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, 11.04.2020 இல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா? என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார் நிலையில் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தவிட்டு ஆகஸ்ட் 19 வரை அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு என வாட்ஸ் ஆப்-பில் செய்தி பரவுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள் அது அதிகாரப்பூர்வமானதா  எனவும் விளக்கமளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.