தமிழ்நாடு

``தமிழ், திராவிடத்தை ஆளவும் வைக்கிறது; தமிழர்களை வாழவும் வைக்கிறது!”-அன்பில் மகேஷ் பேச்சு

webteam

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பொன்றில், “இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தாய்மொழியாம் தமிழ் தான்” என்று பேசியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் கால்நடை சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் பேசும்போது, “இன்றைக்கு திராவிட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தாய்மொழியாம் தமிழ் தான். தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது” என்றார்.

பின் பள்ளிக்கல்வித்துறைக்கான வசதிகள் குறித்து அவர் பேசுகையில், “வரும் நவம்பர் முதல் வாரத்திற்குள்ளாக சீருடை உள்ளிட்ட பொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக புத்தகப்பை வழங்குவதற்கான பணிகளை துவங்கி, ஜனவரி மாதத்திற்குள்ளாக வழங்கி விடுவோம். அடுத்த கல்வியாண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, முதல் இரண்டு வாரத்திற்குள்ளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை, புத்தகப்பை ஆகியவை தாமாதம் இல்லாமல் வழங்கப்பட்டு விடும்” என தெரிவித்தார்.