தமிழ்நாடு

தமிழ்த் தேசியமும்.. சீமானின் அரசியலும்..

webteam

தமிழக அரசியல் வரலாறு என்பது கடந்த 50 வருடங்களாக திராவிடத்தை சுற்றித்தான் இயங்கி வருகிறது. இன்றும் ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி திராவிடக் கட்சிகள் தான் ஆண்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகள் இருந்தாலும் அவை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் நிலையில் இல்லாத நிலை இருக்கிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இதுதவிர சில மாநில கட்சிகள் இருந்தாலும், அவை திராவிடக் கட்சிகளின் கூட்டணியை கடந்து தனித்து இயங்குவதில்லை.

இந்த அனைத்திற்கு மாற்றாக ‘நாம் தமிழர்’ என்னும் கட்சியை மீட்டெடுத்து, தமிழ்த் தேசிய அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கிறார் சீமான். ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவியது சி.பா. ஆதித்தனார். ஆனால் அந்த கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து தற்போது தமிழ் தேசிய அரசியல் பாதையில் பயணிப்பவர் சீமான். மற்ற தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை விட முன்னோக்கி சென்றுவிட்டார் என்றே கூறலாம். தமிழ்த் தேசிய அரசியல் என்பது நீண்ட காலம் தமிழகத்தில் இருந்து வந்தாலும், எந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சியும் எட்டாத இளைஞர்கள் செல்வாக்கை சீமான் எட்டியிருக்கிறார் என்று கூற வேண்டும்.

ஆரம்பத்தில் பெரியாரை ஆதரித்தார், பின்னர் எதிர்த்தார். திராவிடத்தை ஆதரித்தார், பின்னர் எதிர்த்தார். கடவுளை எதிர்த்தார், தற்போது ஆதரிக்கிறார். சினிமா நடிகர்களை சில மேடைகளில் புகழ்கிறார், சில மேடைகளில் விமர்சிக்கிறார் என சீமான் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரது பின்னால் ஏராளமான இளைஞர்கள் திரண்டு நிற்கின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அதற்கு காரணம் அவரிடம் இருக்கும் ஆவேசம் கலந்த, தமிழ் தேசிய அரசியல் பேச்சு. இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக இருக்கும் இவரின் பேச்சில், நகைச்சுவையான கிண்டல்களும் கலந்திருக்கும். இதுதான் இளைஞர்களை ரசிக்க வைக்கிறது எனலாம்.

கட்சி தொடங்கியது முதல் இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இருப்பது, எந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் போட்டியிடுவது. எந்த தலைவரையும், பதவியில் இருப்பவரையும் விமர்சிப்பது. கொட்டும் மழையில் பேசுவது. தமிழ் பாரம்பரியம் சார்ந்த உணவுகள், மரங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளுக்காக குரல் கொடுப்பது என சீமானின் தனித்துவத்தை ஒரு பட்டியலே போடலாம். அதுமட்டுமின்றி கட்சியை ஒருங்கிணைத்தது முதல் இன்று வரை அவர் கூறும் ஒரே தலைவரின் பெயராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயர் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பிரபாகரனின் பிறந்த நாளை விழா எடுக்கிறார். இது கணிசமான பிரபாகரனின் பிரியர்களை அவர் பக்கம் இழுத்திருக்கிறது எனலாம்.

சினிமாவில் பெரிதளவும் பிரபலம் ஆகவிட்டாலும், இன்று தமிழ்நாட்டில் எந்த இடத்தில் கேட்டாலும் சீமான் என்றால் தெரியும் என்ற அளவிற்கு அவர் பிரபலமாகிவிட்டார் என்றால் அது மிகையல்ல. மற்ற கட்சிகளைப் போல தொண்டர்கள் என்று கூறாமல் தனது கட்சியில் இருக்கும் அனைவரையுமே தம்பிகள் என்று அழைப்பதும் சீமான் பக்கம் இளைஞர்களை இழுத்திருக்கிறது. இவருக்கு சமூகத்தில் மட்டுமில்லாமல், சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டம் இருக்கிறது. இன்று காலை முதலே அவரது பிறந்த நாளை ட்ரெண்டாக்கி கொண்டாடித் தீர்த்ததே அதற்கு உதாரணம்.