தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில், காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில், காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் தகவலின்படி, 2024ஆம் ஆண்டு 3,063 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 3,170 ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் சுமார் 107 யானைகள் அதிகரித்திருப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் கர்நாடகா அரசுடன் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்தியது. வனத்துறை அதிகாரிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 காப்பகங்களில், மொத்தம் 8,989 சதுர கி.மீ பரப்பளவில் இந்த யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக 162 யானைகளுடன் முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் அடர்த்தியில் முதலிடத்தை பெற்றுள்ளது. அதேபோல, 80% யானைகள் கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளுடன் இணைந்திருக்கும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் காப்பகங்களில் வாழ்வதுகண்டறியப்பட்டுள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில், வயதுவந்த இளம்யானைகள் 44% ஆக உள்ளன. மேலும், யானைகளின் ஆண் - பெண் விகிதம் 1:1.77 ஆகவும் உள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் யானைகளின் அடர்த்தி அமைப்பு நிலையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது யானை வழித்தடங்களைப் பாதுகாத்தல், யானைகள் வாழ்விட மறுசீரமைப்புத் திட்டங்கள், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவுஎன வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.