தமிழ்நாடு

“அப்போ.. மழை வேண்டாம், ‘மேட்ச்’தான் முக்கியம்” - வெதர்மேன் வருத்தம்

“அப்போ.. மழை வேண்டாம், ‘மேட்ச்’தான் முக்கியம்” - வெதர்மேன் வருத்தம்

rajakannan

மேட்ச் தான் முக்கியம், மழை முக்கியமில்லையா? என்று வெதர்மேன் பிரதீப் ஜான் வருத்தத்துடன் வினவியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். சிஎஸ்கே, மும்பை இடையிலான போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

போட்டி தொடங்க இன்னும் ஒருசில மணி நேரமே உள்ளநிலையில், சென்னை தற்போது மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில இடங்களில் தூரல் போடுகிறது. மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒருவேளை மழை பெய்தால் போட்டி நடைபெற வாய்ப்பு இருக்காது. 

இந்நிலையில், போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் மழை வேண்டாம் என்பது போல் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கமெண்ட்டுகளை கவனித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “மழையே மழையே போய்விடு என்பதுபோல் சிலர் கருத்துக்களை பதிவிடுவது ஆச்சர்யமளிக்கிறது. மழை முக்கியம் இல்ல போல.. மேட்ச் தான் வேணும் போல” என்று வருத்தத்துடன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.