தமிழ்நாடு

இன்னும் 10 நாள் இருக்கு அதுக்குள்ளயே புயலா - வெதர்மேன்

இன்னும் 10 நாள் இருக்கு அதுக்குள்ளயே புயலா - வெதர்மேன்

webteam

வங்கக் கடலில் வரும் 29ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வரும் 27ஆம் தேதியன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி‌ நகர்ந்து மேலும் வலுப்பெற்று 29ஆம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 29ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “கிராபிக்ஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு. 10 நாட்கள் முன் கூட்டியே முடிவு செய்வது ஏப்ரல் மாத வானிலை நிலவரத்தில் இயலாதது. புயல் உருவாகுவதில் மாறுதல்கள் ஏற்படலாம், திசைகளும் மாறலாம். காத்திருப்போம். வானிலை மையம் கூறுவது போல நடந்தால் எனக்கு மகிழ்ச்சியே. இன்னும் 3 நாட்களில் ஒரு தெளிவு கிடைத்துவிடும். சென்னைக்கு தண்ணீர் தேவை” என குறிப்பிட்டுள்ளார்.