தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா - அமைச்சர் தகவல்

webteam

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி, சென்னை மாநகரப் பேருந்துகளில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது என்றும், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் திருமாவேலனின் 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் புதுக்கோட்டை வருகை தந்திருந்தார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்க பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டின்பிஎஸ்சி மூலம் வட்டார அலுவலகங்களில் காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது,

மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையாக முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டி உள்ளது. இந்தப் பணி நிறைவடைந்ததும் தமிழக முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.