சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நூல்வெளியீட்டு விழா ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். மேலும் அவருடன், பாமக மூத்த நிர்வாகி பாலு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லயோலா மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் ராஜ்மோகன் பேசும்போது, மேடைகளில் பேசி, புத்தகங்கள் படித்து அமைச்சராக வந்து இருக்கிறேன். பொன்னாடை தவிர்த்து, புத்தகங்களை பரிசாக கொடுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு மாணவனுக்கும் புத்தகம் அவசியம்; அவர்கள் கையில் கொடுங்கள். அரசு பள்ளியில் செய்திதாள் மாணவர்கள் படிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பள்ளிக்கல்வித்துறை மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கிறோம். அதன் ஒருபகுதியாக, மாணவர்கள் கதைகளின் வழியே கணக்கு பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி, கணிதத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில், வண்ணப் படங்கள், பாடத்தின் தலைப்புகளை கொண்டு புத்தகத்தை மாற்றியமைக்கவுள்ளோம்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் கடந்த ஜூலை 21-ம் தேதி, தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குறித்து ஆலோசிக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருந்தது. அதில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட 17 பேர் கொண்ட புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜ்மோகன், பள்ளியில் எனக்கு கணிதத்தை புரிந்து கொள்வதற்கு மிக சிரமமாக இருந்தது. சிறுவயதில் அடிவாங்கும் குழந்தையாக நான் கல்வியைப் பயின்றேன். இந்த காலத்தில் எல்லாம் மாறிவிட்டது உணவு பழக்க வழக்கம் அனைத்தும் மாறிவிட்டது. இந்த நொடி முதல் தமிழ்நாடு கல்வியும் மாறுகிறது மக்களை நோக்கி நகர்கிறது மாணவர் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது. இனி கதைகள் வழியே கணித பாடத்தை படிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. கதைகள் சொல்லும் வகையில் வகுப்பறை நடக்கப் போகிறது எனத் தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் தான், இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கணிதத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில், வண்ணப் படங்கள், பாடத்தின் தலைப்புகளை கொண்டு புத்தகத்தை மாற்றியமைக்கவுள்ளோம் எனத் தெரிவித்திருக்கிறார்.