ரேஷன் அரிசி பறிமுதல்  pt desk
தமிழ்நாடு

தமிழ்நாடு டூ கர்நாடகா: லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

தமிழகத்தில் இருந்து ஆந்திர வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குப்பம் டிஎஸ்பி பார்த்தசாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆந்திர மாநிலம் குப்பம் டி.கே.பள்ளி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

ரேஷன் அரிசி பறிமுதல்

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் லாரியை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது அதிலிருந்து மூன்று பேர் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அதில், அவர்கள் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், ஹரிஷ், சிவராஜ் என்பது தெரியவந்தது.

இவர்கள் மூவரும் தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்குச் சென்று உணவகங்களுக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த குப்பம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 5 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.