இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. 2025-26 நிதியாண்டில், தேசிய சராசரியான 6.5 சதவீதத்தை விட அதிகமாக, 11 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மாநிலப் பொருளாதாரத்தில் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த முதன்மைத் துறை 13 சதவீதமும் தொழில், உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் துறை 33 சதவீதமும்; சேவைத் துறை 54 சதவீதமும் பங்களிக்கின்றன.
நாட்டிலேயே அதிகபட்சமாக 40 ஆயிரம் தொழிற்சாலைகளுடன்,15 சதவீதத் தொழிற்சாலைத் தொழிலாளர்களைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்கிறது. மின்னணு, ஜவுளி, தோல் பொருட்கள் மற்றும் வாகன தயாரிப்பில் மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் சராசரி தனிநபர் வருமானம் 3.62 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், உயர்கல்வி சேர்க்கை விகிதம் 47 சதவீதத்தைப் பெற்று நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதேவேளையில், 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை, 78000 கோடி வருவாய் பற்றாக்குறை மற்றும் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ள சொந்த வரி வருவாய் ஆகியவை மாநிலத்தின் நிதிநிலைக்குப் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன.