தமிழ்நாடு

சியாச்சின் பனிப்பொழிவில் தமிழக வீரர் உயிரிழப்பு

சியாச்சின் பனிப்பொழிவில் தமிழக வீரர் உயிரிழப்பு

rajakannan

சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் ஒருவர், கடும் பனிப்பொழிவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானை ஒட்டிய காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப் பகுதியில் மைனஸ் 45 டிகிரி வரையில் குளிர் நிலவுவது வழக்கம். சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலில் பட்டால், அந்தப் பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொண்டு விடும். 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்துபோகும் குளிரில் நாட்டுக்காக ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சியாச்சின் மலைத் தொடர்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் பால்பாண்டி உயிரிழந்துள்ளார். கண்காணிப்பு கோபுரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் கோபுரம் சரிந்து விழுந்தது. அப்போது, அந்த சரிவில் சிக்கி அவரும் உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரர் பால்பாண்டி மதுரை மாவட்டம் டி.அரசம்பட்டியை சேர்ந்தவர்.  

இதற்கு முன்பாக, கடந்த மே மாதம் சியோச்சினில் பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதில், மதுரை, தேனி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 4 தமிழக வீரர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.