நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.. ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் கலந்துக்கொள்ளும் முதல் அரசு விழா என்பதால் பிரதமருக்கு நன்றி.அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம் என 2006 தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.அந்த கனவு இன்று நினைவாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும்'' என்றார்.