நிமோனியா காய்ச்சல் Pt web
தமிழ்நாடு

தமிழகத்தில் பரவும் நிமோனியா தொற்று.. அலட்சியம் வேண்டாம்.. சுகாதாரத் துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் நுரையீரல் தொற்றான நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அலட்சியம் காட்ட வேண்டாம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

PT WEB

தமிழகத்தில் பரவலாக வரும் பனிப்பொழிவால் நிமோனியா தொற்று அதிகரித்து, தினசரி 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இளம் வயதினருக்கு பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது ஆபத்தானது. முதியோர் மற்றும் இணை நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கிறது.

தமிழகத்தில் பரவலாக பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவற்றால் பாதிக்கப்படுவோர், காய்ச்சல், நடுக்கம், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, கடுமையான உடல் வலி, இருமல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டுவருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் தினசரி 50க்கும் மேற்பட்டோர் நிமோனியா பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

நிமோனியா பாதிப்பு

தொண்டையில் ஏற்படும் நிமோனியா தொற்று, உரிய சிகிச்சை பெறாதபோது, தொண்டையின் அடிப்பகுதி வரை சென்று, நுரையீரலில் தங்கி விடுவதாகவும், இது வீக்கத்தை ஏற்படுத்தி, இரண்டு நுரையீரல்களையும் பாதிப்பதாகவும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிமோனியா காய்ச்சலை பொறுத்தவரையில், இளம் வயதினரிடையே பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு, டெங்கு, ப்ளூ காய்ச்சல் போன்றவற்றுடன், நிமோனியா பாதிப்பும் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே முதியோர், இணை நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும், லேசான பாதிப்பு என அலட்சியம் காட்டாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.