தமிழ்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தீவிர போராட்டம் -சத்துணவு ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

webteam

"தமிழக அரசு ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயலாளர் மாயமலை எச்சரித்துள்ளார்.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் `சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச பென்ஷன் 7850 ரூபாய் அமல்படுத்த வேண்டும், மருத்துவப் படி 300 வழங்க வேண்டும், ஈமக்கிரியை செலவு நிதி 25,000 வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே EPF, GPF, lump sum வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

மேலும், “தேர்தல்கால அறிவிப்புகளை அமல்படுத்த தயங்காமல் அமல் படுத்துங்கள், சமூக நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் எங்கள் சங்க மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். எங்கள் போராட்டம் தீவிரமாகும்” என்று முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் மாயமலை, “தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்குவோம், அவர்களது பென்ஷன் முறைப்படுத்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு, மாதம் 2000 ரூபாய், அதாவது ஒரு நாளைக்கு பென்ஷன் தொகை 65 ரூபாய் 75 பைசா தான் வழங்கப்படுகிறது. காவல் துறையில் 7 ஆண்டு காலம் பணியாற்றிய மோப்ப நாய் மோப்ப சக்தி இழந்த பின் அதற்கு பென்சன் தொகையாக மாதம் 6000 வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி சாதாரண கிராமப்புற கோவில் பூசாரிகள் ஓய்வூதியம் கூட 4000 ஆக அறிவித்துள்ளனர்.

எங்கள் ஓய்வூதியத்தை உயர்த்த்தால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், காலி தட்டு ஏந்தி போராடினோம். அது பயனளிக்கவில்லை. இப்போது இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த ஆட்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. 40 ஆண்டுகாலம் உழைத்து 70 வயது கடந்த நிலையில் உள்ளோம். அதிகம் பெண்கள் தான் உள்ளனர். அரசின் குறைந்தபட்ச பென்ஷன் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் நிதி நிலை சரி இல்லை. இருப்பினும் சிறப்பு கால முறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவது போல 6,750 ரூபாய் அகவிலையுடன் வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தீவிரமாக போராட்டத்தில் பணியில் இருப்பவர்களை ஒன்று சேர்த்து முன்னெடுப்போம்” என்றார்.