நெல் சாகுபடி ANI
தமிழ்நாடு

பருவமழை பொய்த்துபோனதன் எதிரொலி.. தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!!

பருவமழை பொய்த்துப்போனதன் பாதிப்பு தமிழ்நாட்டில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஆம்.. அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து PT FOCUS பகுதியில் பார்க்கலாம்.

PT WEB

பருவமழை பற்றாக்குறை மற்றும் அண்டை மாநிலங்களின் விளைச்சல் சரிவு காரணமாகத் தமிழகத்தில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் ஆண்டு தேவை 95 லட்சம் டன்னாக உள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தி போக வெளிமாநிலத்தில் இருந்து 30 லட்சம் டன் வரை அரிசி இறக்குமதியை நம்பியுள்ளோம். தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இறக்குமதி பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. 26 கிலோ கொண்ட பொன்னி சன்ன ரக அரிசி மூட்டை, முன்பு 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது, தற்போது 1,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நெல் சாகுபடி

அதாவது ஒரு கிலோ 69 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண சன்ன ரக அரிசி மூட்டை முன்பு 1,200 ரூபாயாக இருந்தது, தற்போது 1,600 ரூபாயாக அதிகரித்துள்ளது. 25 கிலோ பிராண்டு பொன்னி அரிசி மூட்டை, முன்பு 1,250 முதல் 1,450 வரை விற்கப்பட்ட நிலை மாறி, தற்போது 1,450 முதல் 1,550 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 30 கிலோ பாசுமதி அரிசி மூட்டை முன்பு 1,450 முதல் 2,500 வரை இருந்தது. தற்போது 1,950 முதல் 3,000 ரூபாய் வரை உச்சம் தொட்டுள்ளது. 30 கிலோ சீரகசம்பா அரிசி முன்பு 4,900 ரூபாயாக இருந்தது, தற்போது 5,400 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கணிப்புப்படி, வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகே புதிய நெல் விளைச்சல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை இந்த விலை உயர்வு, குடும்ப பட்ஜெட்டை பதம் பார்க்கும் என்றே அஞ்சப்படுகிறது.