தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக 30,000-ஐ கடந்த நிலையில், சென்னை மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் தொற்று வேகமாக அதிகரித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப் பரவல் மிக வேகமாக உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் உட்பட 30,621 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 14,99,485 ஆக அதிகரித்துள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட 1,093 சிறார்கள் 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 19,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12,98,945 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,768 ஆக அதிகரித்துள்ளது. இணைநோய் இல்லாத 68 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,83,772 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6,991 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 2835 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,173 பேரும், மதுரை மாவட்டத்தில் 1,331 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,251 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,079 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.