பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை web
தமிழ்நாடு

'+2 தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி..' 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

2026 மார்ச்-ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த தேதி மற்றும் அட்டவணைகள் இன்று வெளியானது..

Rishan Vengai

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளன. 12 ஆம் வகுப்பு தேர்வில் கணக்குப்பதிவியல் பாடத்தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு அட்டவணையை அறிந்து, அதற்கேற்ப தயாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 2026 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணையும், 11ஆம் வகுப்பு அரியர் பொதுத்தேர்வுக்கான அட்டவணையும் இன்று வெளியடப்பட்டது..

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுலக அரங்கில் இருந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த பொதுத் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார்.

10ஆம் வகுப்பு தேர்வு..

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் 11ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8.7 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்புபொதுத்தேர்வை எழுத உள்ளனர். தேர்வுமுடிவுகள் மே மாதம் 20ஆம் தேதிவெளியிடப்படும்.

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11ஆம் தேதி நடைபெறும். ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் மார்ச் 25ஆம் தேதியும், அறிவியல் பாடம் மார்ச் 30ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறும். விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு தேர்வு..

பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடைபெற உள்ளன. சுமார் 8.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். தேர்வுமுடிவுகள் மே மாதம் 8ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 02ஆம் தேதி நடைபெறும். ஆங்கிலம் மார்ச் 05-ம் தேதியும், வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் மார்ச் 09-ம் தேதியும் நடைபெறும். மார்ச் 13-ம் தேதி இயற்பியல் மற்றும் பொருளியலும், மார்ச் 17-ம் தேதி கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் மார்ச் 23-ம் தேதி உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு தேர்வுகளும், மார்ச் 26-ம் தேதி கணினி அறிவியல் தேர்வுகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்த ஆண்டு, முதல்முறையாக கணக்குப்பதிவியல் பாடத்தேர்வின்போது, தேர்வு அறைக்குள்ளே கால்குலேட்டர் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு தேர்வு..

11ஆம் வகுப்பு அரியர்தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 27 வரைநடைபெற உள்ளன.

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 03ஆம் தேதி நடைபெறும். ஆங்கிலம் மார்ச் 06-ம் தேதியும், வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் மார்ச் 10-ம் தேதியும் நடைபெறும். மார்ச் 12-ம் தேதி கணினி அறிவியலும், மார்ச் 18-ம் தேதி இயற்பியல் மற்றும் பொருளியலும், மார்ச் 24-ம் தேதி கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் மார்ச் 27-ம் தேதி உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு தேர்வுகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பொதுத் தேர்வு கால அட்டவணையை இப்போதுதெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறுதங்களைத் தயார்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.