மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மாறாக சில கட்சிகள் அதற்கு ஆதரவையும் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான விருப்பமனு விநியோக பணியும் மும்முரமாக நடைபெற்றன. இந்த நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடித் தேர்தலுக்குப் பதிலாக மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான அவசரச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து தேனியில் விளக்கமளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நடத்திய முறையையே தாங்களும் பின்பற்றுவதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்தக் கருத்திற்கு மாறாக மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வாதிகாரப் போக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடுவதாகவும் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியிலுள்ள பாரதிய ஜனதா தரப்பிலும் மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் கூறுகையில், மறைமுகத் தேர்தல் என்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். இதே கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் இதனை ஆதரித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன், திமுக ஆட்சியில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். திமுக பின்பற்றியதையே அதிமுகவும் பின்பற்றுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், மக்கள் செல்வாக்கு இல்லாததால்தான் மறைமுகத் தேர்தல். ஜனநாயக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜனநாயக உரிமையை அதிமுக அரசு பறித்துள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் சிபிஎம் கட்சி அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லாததால் நடவடிக்கை என்றும் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் ஆதரவு இல்லாததால் அதிமுக அரசு மறைமுக தேர்தலை கொண்டுவந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளன.