தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம் : புதிய பரிந்துரைகள்

உடல் உறுப்பு தானம் : புதிய பரிந்துரைகள்

webteam

உடல் உறுப்பு தானத்தில் புதிய நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அமைத்த இரு நபர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த மே மாதம் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கேரளாவை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் , குடும்பத்தினரின் அனுமதி பெற்று தமிழகத்தில் பல நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. ஆனால் முறையான அனுமதி இல்லாமல் உடல் உறுப்புகள் பெறப்பட்டதாக கேரள முதல்வர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதனிடையே அவரது உறுப்புகள் இந்தியர்களை விடுத்து வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக, மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தலைமையில் இரண்டு நபர் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் ஆய்வறிக்கையில், உடல் உறுப்பு தான சிகிச்சையில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படவில்லை என்றும், முறைகேடுகள் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. முறையான தகவல் பரிமாற்றம் இல்லாதது சில நேரங்களில் குழப்பங்களை விளைவிப்பதாக இந்த குழு தெரிவித்துள்ளது. உடல் உறுப்புகளுக்கான காத்திருக்கும் நோயாளிகளை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்றும், முதலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள், இரண்டாவது வெளிமாநில நோயாளிகள், மூன்றாவதாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என பிரித்து உடல் உறுப்புகளை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. முதலில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இந்த குழு கூறியுள்ளது. சில நேரங்களில் நோயாளிகளின் பெயர்களை பதிவு செய்வதில் ஏற்படும் பிழைகளும் குழப்பங்களை விளைவிப்பதால் அதனை முறைப்படுத்தவும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.