தமிழ்நாடு

தமிழகத்தில் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த ஜெர்மனி உதவி

தமிழகத்தில் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த ஜெர்மனி உதவி

jagadeesh

தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகளை அறிமுகம் செய்ய 1600 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கவுள்ளதாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏஞ்சலா மெர்கல் தொழில்துறையினர் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு குறித்து குறிப்பிட்டார். தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க சுமார் 1600 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்ற அவர், டெல்லியில் நிலவும் மாசை காணும் யாரும் டீசல் பேருந்துகளை மாற்றவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

2,313 மின் பேருந்துகளை 1580 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி பேருந்துகளை வாங்கவும், அவற்றை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கவும், போக்குவரத்துத்துறை செயல்பாட்டை மேம்படுத்த மென்பொருள் மற்றும் வன்பொருள்களை வாங்கவும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும்.