மழை pt web
தமிழ்நாடு

அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பச்சலனம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

PT WEB

வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இரவு நேரங்களில் மழை பெய்து மண்ணை குளிர்வித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வருகிற 28ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்

இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மழை பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரனிடம் பேசினோம். அப்போது, வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது குறித்தான கேள்வி முன்வைக்கப்பட்டது. அவர் கூறுகையில், ”ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது. இதன்காரணமாக வளிமண்டலத்தில் ஈரப்பதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக,தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை. ஆனால், இந்த வருடம், செப்டம்பர் 5 ஆம் தேதி முதலே தென்மேற்கு பருவக்காற்று வலுகுறைந்து காணப்படுகிறது. இதனால், வளிமண்டலத்தில் இருக்கும் ஈரப்பதமான சூழ்நிலை காரணமாக தமிழகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு பருவக்காற்றுக் காலங்களில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பொழிவது இயல்பானதே. ஆனால், வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் மழை பெய்யும் நாட்களைவிட இந்த வருடம் அதிகமாக மழை பொழிந்திருக்கின்றன. தொடர்ந்து, வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடக்கு வங்கக்கடலில் உருவாகிறது. அதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தீவிரமடையும் போது தமிழ்நாட்டில் மழை குறையும்.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தொடர்ந்து, செப்டம்பர் 25 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தொடங்கும் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், காரைக்கால், புதுச்சேரி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு மற்றும் நள்ளிரவில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்; அதேபோல் வடக்கு உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்” எனவும் தெரிவித்தார்.