கனமழை எச்சரிக்கை pt web
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி வரை மழை: வானிலை அப்டேட்

தமிழ்நாட்டில் நவம்பர் 4 ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

PT digital Desk

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மோன்தா புயல் காரணமாக சென்னையில் பலமணி நேரம் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 4ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தில் வழக்கத்தை விட மழைபொழிவு அதிகமாகவே இருந்தது. கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமான நிலையில் மோன்தா புயல் உருவானது.. அது சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து அன்று இரவு காக்கிநாடாவுக்கு தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இந்த மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு பலமணி நேரம் நீடித்தது. அத்துடன் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழைபொழிவு இருந்தது..

இந்நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 4 ஆம் தேதி வரை மழை பொழிவு இருக்குமென என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இடி - மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்துடன் கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்ததன் காரணமாகவும் மோன்தா புயலின் தாக்கத்தினாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..

கடந்த அக்டோபர் மாதத்தை விட இந்த வருடம் வடகிழக்கு பருவமழை சுமார் 230 மி.மீ. மழை அதிகமாக பெய்துள்ளது. இது இயல்பை விட 57 சதவீதம் அதிகமாகும் எனவும் வங்கக்கடலில் மீண்டும் புயல்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..