சென்னை வேளச்சேரி சம்பவம்
சென்னை வேளச்சேரி சம்பவம் சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா
தமிழ்நாடு

“சென்னை வேளச்சேரி சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்படவில்லை”- காவல் ஆணையர்!

Prakash J

சென்னை வேளச்சேரி சாலையில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்குள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இன்று (ஆகஸ்ட் 21) பிரச்னை ஏற்பட்டது. இதில் ஒரு குழு மாணவர்கள் இன்னொரு குழுவினர் மீது பட்டாசு வீசியுள்ளனர். அது பலத்த சத்தத்துடன் வெடித்து உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிண்டி காவல்துறை விரைந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Edappadi palaniswami

அந்தவகையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் கண்டன்ம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?

இந்தச் சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள்தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதுபோல் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பிரச்னையில், நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

அண்ணாமலை

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்டவை தமிழகத்தில் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதற்குமேலும் சீர்கெட முடியாது. உடனடியாக இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெடிகுண்டு கலாசாரத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

இப்படியாக வேளச்சேரி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீசியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், வீசப்பட்டது திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, “சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்படவில்லை; திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளோம். மற்றொரு மாணவரைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.