தமிழ்நாடு

ராமலிங்கம் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

rajakannan

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலைக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து, இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும், மதரீதியிலான பதட்டங்களை உருவாக்குகிற எச்செயலையும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ராமலிங்கம் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி, ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உண்மையில் மதமாற்றம் செய்ய முற்பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனத் தெரிவித்தார்.