தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் ஸ்தம்பித்த அரசு கேபிள் டிவி! பின்னணியில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

webteam

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் வாடிக்கையாளர்கள் 21 லட்சம் பேருக்கு கேபிள் டிவி தெரியாத வண்ணம் தொழில்நுட்ப ரீதியாக இடையூறு ஏற்படுத்திய விவகாரத்தில், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜன் என்பவரது மும்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தம் செய்தது. சுமார் 614 கோடி ரூபாய் அளவிற்கு 37 லட்சத்தி 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு அதை வருடாந்திர நிர்வகிக்கும் சேவைகளையும் ராஜனின் இரண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனம் காலதாமதம் செய்ததன் காரணமாக, சுமார் 52 கோடி ரூபாய் பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

இந்த நிலுவைத் தொகை தொடர்பாக ராஜன், அரசு தரப்பிடம் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் நிலுவைத் தொகை வராததால் ஆத்திரமடைந்து சட்ட விரோதமாக இணையத்தை பயன்படுத்தி அரசு, பொதுமக்களுக்காக அளித்த கேபிள் சேவையை சீர்குலைக்கும் வகையில், தன் கட்டுப்பாட்டில் செயல்படும் 21 லட்சம் தமிழக அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் செட்டாப் பாக்ஸ் செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக ராஜன் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறாக ஒப்பந்தத்தை மீறி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட அரசு கேபிள் சேவையில் இடையூறு ஏற்படுத்திய தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம், தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் அரசு கேபிள் டிவி இணைப்பை சரி செய்து கொடுக்க வலியுறுத்தி மதுரை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு கேபிள் ஆப்பரேட்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.