ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் மறைந்த இராமகோபாலனின் முதலாமாண்டு நினைவு தினம் திருச்சியில் அனுசரிக்கப்பட்டது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது " இந்து என்பது வாழ்வியல் முறை, ஆங்கிலேயரது வரவுக்குப் பின்னர், மதமாக மாறியது. இந்து வாழ்வியல் முறை சில சிக்கல்களுக்கு வந்தபோது அந்த சிக்கல்களை முன்நின்று களைந்தவர் ராமகோபாலன். ஆங்கிலேயர் திணித்த இந்து மத கோட்பாடை, மீண்டும் இந்து வாழ்வியல் முறையாக மாற்றிகாட்டியவர் ராமகோபாலன்"
'என் தந்தைக்கு மிக நெருக்கமானவர். அவரிடம் அதிகளவு ஆன்மிகம் பற்றி பேசக்கூடியவர் ராமகோபாலன்' என்று, ஸ்டாலின் இரங்கல் அறிக்கை கொடுத்தார். வீரமணியும் இரங்கல் அறிக்கை தெரிவித்திருந்தார். கோயில் நகைகளை உருக்குவது, வார இறுதியில் கோயில்களை மூடுவது போன்ற திமுக அரசு எடுக்கும் முடிவுகளை பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் அழிக்க முடியாதது. இதற்கு முதலில் படிக்க வேண்டும். இந்திய வரலாற்றை படிக்க வேண்டும். ராமகோபாலன் விரும்பிய தமிழகம் விரைவில் மலரும் என்று பேசினார்.