ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரண நிதி விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி இதுகுறித்து கோரிக்கை வைத்தபோது, இந்த முறையாவது தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2,000 கோடியை பிரதமர் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழகத்தில் மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். புயல், மழையால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்கள் பிரதமரை சந்தித்து பாதிப்புகள் குறித்து விளக்கி பேசவேண்டும் என்று எங்களிடம் தெரிவித்துள்ளார்கள்” என்றார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ''உள்துறை அமைச்சர் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பயிர்கள் சேதமடைந்துள்ளன. துணை முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் சேதங்கள் குறித்து களஆய்வு மேற்கொண்டு தமிழகம் திரும்பிய நிலையில், பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். ஒன்றரை கோடி ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
721 வீடுகள் சேதமடைந்துள்ளன. 963 கால்நடைகள் பலியாகியுள்ளன. பாலங்கள், சாலைகள், மின்கம்பங்கள், பள்ளி கட்டடங்கள், சமூக நலக் கூடங்கள் சேதமடைந்துள்ளன. இதனை கவனத்தில் கொண்டு மதிப்பீட்டுக் குழுவை அனுப்பி ஆய்வு நடத்தி மதிப்பீடு செய்து, நிவாரணத்தை வழங்க வேண்டும் எனக் கோருகிறேன்" என்று பேசியுள்ளார்.
மேலும், திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் வெள்ள நிவாரண நிதி கோரி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.