நாய்க்கடி முகநூல்
தமிழ்நாடு

மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் | நாய்க்கடியால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

நாய்க்கடி பிரச்னையை சர்வசாதாரணமாக புறம்தள்ளிவிட முடியாது. மனிதர்களை அச்சுறுத்தும் கொடூரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

PT WEB

நாய்க்கடி பிரச்னையை சர்வசாதாரணமாக புறம்தள்ளிவிட முடியாது. மனிதர்களை அச்சுறுத்தும் கொடூரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதுமே நாய்க்கடி பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. இதுகுறித்து, தமிழ்நாட்டில் கிடைக்கும் தரவுகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தெரு நாய்கள்

2025ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை மட்டும் தமிழ்நாட்டில் 8 பேர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் நாய்க்கடியால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்கின்றன தரவுகள். நாய்க்கடியால் ஏற்படும் ரேபீசை, 2024ஆம் ஆண்டு, குறிப்பிடத்தகுந்த சுகாதார பிரச்னையாக அறிவித்திருந்த மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம், தற்போதோ, பொதுமக்களுக்கான அச்சுறுத்தலாக குறிப்பிட்டுள்ளது. அரசு பொது மருத்துவமனைகளில், மலேரியா, டெங்கு, காலரா, சாலை விபத்துகளைவிட நாய்க்கடிக்குத்தான் அதிக அளவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 2023இல் நாய்க்கடியால் 18 பேர் உயிரிழந்த நிலையில், 4.41 லட்சம் பேர் நாய்க்கடியால் சிகிச்சை பெற்றனர்.

2024இல் நாய்க்கடிக்கு 23 பேர் உயிரிழந்த நிலையில், 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் சிகிச்சை பெற்றனர். இது அரசு மருத்துவமனைகளின் நிலைதான். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் இல்லை. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையும் 50% அதிகரித்துள்ளது. 2021-22 ல் 9.32 லட்சம் வயல்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2024-25 ல்13.72 லட்சம் வயல்களாக அதிகரித்துள்ளது. 10 மில்லி கொண்ட ஒரு வயல், 5 டோஸ்கள் செலுத்தப்பட வேண்டிய நிலையில், தமிழக அரசு மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன், 179 ரூபாய் என்ற செலவில் இவற்றை வாங்கி அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தி வருகிறது.

நாய்கள்

நாய் கடித்தபின் தடுப்பூசி எடுக்காமலோ, முழுமையாக 5 டோஸ்கள் எடுக்காமலோ விட்டு இறப்பவர்கள் அதிகம் என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வும் அவசியமாக உள்ளது. நாய்க்கடி விவகாரம் பெரிதாகி வரும் நிலையில், தமிழக அரசு ரேபீஸ் தடுப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளத. உள்ளாட்சி அமைபபுகள், கால்நடை துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நாய்கள் எண்ணிக்கையை கணக்கெடுப்பது, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்பது இந்த நேரத்தின் அவசரத் தேவை என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.