எந்த விபத்தில் கால் மூட்டு மாற்று அறுவை செய்ய நேரிட்டதோ, அந்த விபத்து நடந்த அதே ஊரில் 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் முடித்து அசத்தியுள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியிலும், ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கும் ஆர்வத்தாலும் பிரபலமானவர். ஆனால் அவரை வேகமாக நடக்கவே கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்த காலம் உண்டு. 2004 ஆம் ஆண்டு காரில் மதுரைக்கு செல்லும் வழியில் பெரம்பலூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தலையிலும் கால்மூட்டிலும் பலத்த காயமுற்று ஒருமாதகாலம் அவசரசிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வந்தவர் மா.சுப்பிரமணியன்.
கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் இனிமேல் வேகமாக நடக்கக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்த போதும் தளராத உள்ளத்துடன் முயற்சி செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் படிப்படியாக ஓடத்தொடங்கி, மாரத்தான்களில் பங்கேற்கத் தொடங்கினார். கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மராத்தான் போட்டிக்காக இன்று 21.1 கிலோமீட்டர் ஓடியுள்ளார். எந்த இடத்தில் விபத்தில் சிக்கினாரோ அதே ஊரில் தனது 130 ஆவது மாரத்தானை அவர் நிறைவு செய்தார்.
ஓட்டப்பயிற்சியின் இடையே அரசலூர் கிராமத்தில் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். தடைகளை தாண்டி தொடரும் அவரின் இந்த மாரத்தான் பயணம் பலருக்கும் உத்வேகத்தை தரும் என்றாலும் அது மிகையல்ல.