ஜியாலஜி கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு பேரவையில் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயலானது சென்னை, கடலூர் மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களையும் கடுமையாக பாதித்தது. பல இடங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை நகரில் உள்ள மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஏழு உயிரிழந்த சோகமும் நிகழ்ந்தது. பின்னர் மண்ணின் தன்மை குறித்து பல்வேறுகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மகா தீபத் திருவிழா திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மக்கள் மேலே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்கின்ற கேள்விகள் எழுந்தன. இதனிடையே, ஜியாலஜி கமிட்டி சரவணப்பெருமாள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவானது 7, 8, 9 தேதிகளில் ஆய்வை செய்தது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான திட்டம் என்ன? இந்த ஆண்டும் 2000 பேருக்கு மலையில் அனுமதி வழங்கப்படுமா என சட்டப்பேரவையில் இன்று துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, “திருவண்ணாமலையில் சங்ககாலத்தில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது குறித்து துணை முதலமைச்சர் கிரிவலம் பாதையில் நேரடி ஆய்வு நடத்தினார். மேலும் மாவட்ட அமைச்சர் தலைமையில் ஆறு கூட்டங்கள் நடத்தப்பட்டது.
சமீபத்தில் ஏற்பட்ட பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். மலையின் உச்சியில் கொப்பரை தீபம் ஏற்றுவது இன்றியமையாத ஒன்று. சான்றோர் காலத்தில் இருந்து நடைபெற்று வந்த இந்த விழா தடைபடக் கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஜியாலஜி கமிட்டி சர்வணப்பெருமாள் தலைமையில் குழு அமைக்கப்பட்ட்டுள்ளது. 8 பேர் கொண்ட குழு பிமூன்று நாட்கள் மலையில் ஆய்வு செய்துள்ளனர்.
ஜியாலஜி கமிட்டியின் அறிக்கையின்படி, 350 கிலோ திரி கொண்ட கொப்பரைகள் 450 கிலோ நெய் உள்ளிட்ட தீபம் ஏற்றும் பொருள்கள் மனித சக்திகளை பயன்படுத்தி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் மலை உச்சியில் செல்வதற்கான வாய்ப்பு குறைவு” என்ற அடிப்படையில் மறைமுகமாக அமைச்சர் சேகர்பாபு பதில் பேரவையில் இருந்தது.