தமிழ்நாடு

புதிய மோட்டார் வாகன சட்ட விதி: தூத்துக்குடி வாகன ஓட்டிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

புதிய மோட்டார் வாகன சட்ட விதி: தூத்துக்குடி வாகன ஓட்டிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

webteam

புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி தூத்துக்குடியில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வாகன விதிமுறைகளை மீறியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவருக்கு 16 ஆயிரம் ரூபாயை காவல்துறை அபராதமாக விதித்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியின் கால்ட்வெல் காலனி வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை காவலர்கள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த வாகன ஓட்டி தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார். மேலும் அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை. போலீஸ் விசாரணையில் அவர் பெயர் வெங்கடேஷ் என்பதும் அவர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார் இருசக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான வெங்கடேசனுக்கு நீதிபதி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதன்படி மதுபோதையில் வாகன ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் அணியாததற்கு ரூ.5000, ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு ரூ,1000 என மொத்தம் ரூ.16ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

முன்னதாக புதிய மோட்டார் வாகன சட்டம் இந்திய அளவில் அமலான நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலாகவில்லை. உரிய அரசாணை வராததால் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலாகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில் புதிய விதியின்படி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.