தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

webteam

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்‌பட்டு, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே இன்று காலை பத்து மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.

சட்டப்பேரவை கூடியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், செல்வராஜ், சுந்தரவேல், ராமநாதன், முனுசாமி மற்றும் சிவசுப்பிரமணியன் ஆகிய 7 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட உள்ளது. மேலும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ் மற்றும் ராதாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தனித்தனியே நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் காலை 11.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்று, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறப்படும். மேலும் மானிய கோரிக்கைகள் மீதான சட்டப்பேரவைக் கூட்டம் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.