இந்த ஆண்டுக்கான முதலாவது தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி கூடுகிறது. கலைவாணர் அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். இந்த தகவலை சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த தொடரில், அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை, பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் எனக் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்தமுறை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.