தமிழ்நாடு

வேளாண் மண்டலம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

jagadeesh

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக நாளை பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய முதலமைச்சர் தலைமையில் குழு அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. கடந்த 9ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதுகுறித்து சட்ட முன்வடிவு கொண்டு வர வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.