தமிழ்நாடு

சென்னையில் கொரனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் - சுகாதாரத்துறை அமைச்சர்

சென்னையில் கொரனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் - சுகாதாரத்துறை அமைச்சர்

webteam

இந்தியாவிலேயே புனேவுக்கு அடுத்தப்படியாக சென்னையில் கொரனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை - ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், தொழுநோய் விழிப்புணர்வு முகாமை விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர், அண்டை நாடுகளில் கொரனா பாதிப்பு பற்றிய தகவல் வந்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

சீனாவிலிருந்து தமிழகம் வந்த யாருக்கும் நோய் அறிகுறிகள் இல்லை என்றும், சீனாவில் இருந்து வருபவர்கள் அவர்களது வீடுகளிலேயே கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

கொரனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் புனேவுக்கு அடுத்தப்படியாக சென்னையில் கொரனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்