தமிழ்நாடு

நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு - மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

webteam

நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரத்தில் வடக்கு மண்டல மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொன்னேரி, திருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து, அவர்கள் பகுதியில் செய்து வரும் பணிகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தடையில்லா மின்சாரத்தை வழங்க மின் துறை அதிகாரிகள் 24/7 பணியாற்ற வேண்டும் என்றும் மக்களின் அழைப்புகளுக்கு உரிய மரியாதை வழங்கி உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும். 60 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டில் புதிய கட்டணம் அமுலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணமும், அதற்கு முன்பான நாட்களுக்கு பழைய கட்டணம் வசூலிக்கப்படும்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு. அதிமுக ஆட்சி காலத்தில் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 61% உயர்த்தப்பட்டதாகவும், தற்போது 21% தான் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் , அதே வேளையில் பவர்லூம்கள் மற்றும் நூலகங்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டில் உள்ள மீட்டர்களுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு மீட்டர் பொருத்த நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை. மேலும் மின் இணைப்புக்கு பணம் வாங்குவதை நிரூபித்தால் அதற்கு தானே பொறுப்பேற்கிறேன். இதுபோன்ற புகார்களை கண்காணிக்க மண்டலத்துக்கு மூன்று அதிகாரிகளை நியமிக்க உள்ளோம்.” என்று தெரிவித்தார்.

- எம்.ரமேஷ்