தமிழ்நாடு

7 பேர் விடுதலை ஆளுநருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை : தமிழக அரசு

webteam

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்திவரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட்  பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில்  தங்களை முன்கூட்டியே விடுதலை  செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜிவ்காந்தி படுகொலை தவிர பிற வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பலர் தங்களை விடுவிக்க கோரிய வழக்குகள் ஜூலை 30ல் விசாரணைக்கு வரவுள்ளதால், அவற்றுடன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் முன் விடுதலை கோரும் வழக்கையும் இணைத்து விசாரிக்க வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஆளுநர் மாளிகையில் விளக்கம் பெற்று தெரிவிக்க ஏற்கனவே அவகாசம் கோரினீர்கள், இன்னும் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் ஆளுநருக்கு இதுகுறித்து நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.