பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆம் தேதி சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன், 10 சதவீத இடஒதுக்கீடு என்பது கொடிய விஷம் கொண்ட பாம்பு எனப் பேரவையில் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
அப்போது ஸ்டாலின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘இந்த விவகாரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் கருத்தினை கேட்டு அரசு முடிவு எடுக்கும். அதேபோல், 69 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும். இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆகவே, விரைவில் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற வாய்ப்பு உருவானது. இதற்கு முன்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை, பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அனைத்து 10 சதவீத இடஒதுக்கீடு முறை இல்லாமல் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துவிட்டது.
ஆனால், தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறவில்லை. மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு இந்த இடஒதுக்கீட்டை நடைமுறை செய்தால் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 25 சதவீதம் அதிகரித்து கொள்ளலாம் என தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைச் சுட்டிக் காட்டிதான் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னதாக, 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு பற்றி விவாதிக்க வரும் 8ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.