ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்கும் மக்கள் இனி கேஸ் சிலிண்டர் ரசீது மற்றும் உறுதிமொழிக்கடிதம் கொடுக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடி குடும்பங்கள் ரேஷன் கார்டை பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முறையாக ரேஷன் பொருட்களை வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அத்துடன் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தன. இதை சீர்திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தின.
அந்த வகையில் கள்ளச்சந்தைகளில் விற்கப்படும் ரேஷன் மண்ணெண்ணெய் மற்றும் ரேஷன் கடையில் வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் ஆகிய மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய நடவடிக்கையை தமிழக உணவுத்துறை கொண்டு வந்திருக்கிறது.
இதன்படி, இனி ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்கும் மக்கள், தங்களின் கேஸ் சிலிண்டர் ரசீது மற்றும் உறுதிமொழிக்கடிதம் ஒன்றையும் தர வேண்டும். அந்தக் கடிதத்தில் தாங்கள் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் தங்களின் கேஸ் இணைப்பை துண்டிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமாம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்து வந்த மண்ணெண்ணெய் அளவை குறைத்ததே இந்தக் கெடுபிடிக்கு காரணம் எனப்படுகிறது. 2011ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 52,806 லிட்டர் மண்ணெண்ணெய், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி 10,624 லிட்டராக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.