ஆளுநர் ஆர்.என்.ரவி pt
தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்.. புதிய ஆளுநர் அறிவிப்பு!

மேற்குவங்க ஆளுநர் அனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில், பல மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Rishan Vengai

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் மோதல் நிலவிய நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு முழு நேர ஆளுநரை எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த அனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில், ஆர்.என். ரவி அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

கவர்னர் ஆர் என் ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் தொடர் மோதல் இருந்து வந்த நிலையில், ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், முழு நேர ஆளுநரை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆளுநர் ராஜினாமா.. மம்தா பானர்ஜி அதிர்ச்சி!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மம்தா பானர்ஜி

இதுகுறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியும் கவலையும் அடைவதாகத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, சில அரசியல் நலன்களுக்காக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து சில அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்குத் தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.

பல்வேறு ஆளுநர்கள் மாற்றம்.. விவரம்!

  • ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் சிவ் பிரதாப் ஷுக்லா, தெலங்கானா ஆளுநராக நியமனம்

  • தெலங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம்

  • நந்த் கிஷோர் யாதவ், நாகாலாந்து ஆளுநராக நியமனம்

  • ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்நைன், பீகார் ஆளுநராக நியமனம்

  • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமனம்

  • கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு

  • லடாக் துணை ஆளுநர் கவீந்தர் குப்தா, ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமனம்

  • டெல்லி துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, லடாக் துணை ஆளுநராக நியமனம்

  • தரஞ்சித் சிங் சந்து, டெல்லி துணை ஆளுநராக நியமனம்