துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் இதனை தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் பேசுகையில், “பல கோடி ரூபாய் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டுள்ளது. பல கோடி பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரியவந்தது. அதனை நான் நம்பவில்லை. துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததை கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன். துணை வேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதன்படி 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்” என்றார்.
துணை வேந்தர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் தேர்வுக்குழு அனுப்பும் பட்டியலில் இருக்கும் ஒருவரைதான் ஆளுநர் தேர்வு செய்வார். அந்த வகையில் தமிழக ஆளுநரே இப்படியொரு குற்றச்சாட்டு முன் வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.