தமிழ்நாடு

”மழைநீர் தேங்காமலிருக்க தமிழக அரசு விரைவில் நிரந்தர நடவடிக்கை எடுக்கும்”- தா.மோ.அன்பரசன்

webteam
"மழை நீர் தேங்கி நிற்காமல், வடிகால்வாய்களில் தடையின்றி செல்ல தமிழக அரசு விரைவில் உரிய நிரந்தர நடவடிக்கை எடுக்கும்" என ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்துள்ளார்.
கடந்த வாரம் பெய்த கன மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 350 தொழில் நிறுவனங்கள் மற்றும் 30 சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இது தொடர்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து மழைநீர் வடிகால்வாய் செல்லும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கொரட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டுர் ஏரிக்கு செல்லக்கூடிய நீர் வழி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழிற்சாலகள் கட்டப்பட்டுள்ளதால், வடக்கு சிட்கோ பகுதியில் 300 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழைநீர் தொழிற்சாலைகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் ஒரு சில நாட்களாக வெள்ள நீர் வடியாமல் இருந்தது. கடந்த இரு தினமாக மழை பெய்யாத காரணத்தால் மழைநீர் வடிந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட இல்லை” என கூறினார்.
அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டூர் ஏரிக்கு செல்லும் நீர் வழிப்பாதையை நிரந்தரமாக சரிசெய்ய தமிழக அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என  உறுதியளித்தார்.