லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு காகிதப்புலி போல் ஆக்கி காலில் போட்டு மிதிப்பதா என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
லோக் ஆயுக்தா தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு, பவர் இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்திற்கு பல் இல்லாத விதிகளை அரசு உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலி கூத்தாக்கி இருப்பதாக கூறியுள்ளார்.
லோக் ஆயுக்தாவில் ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்தப்பட வேண்டும், விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட புகாருக்குள்ளானவர் குறித்து வெளியில் தெரியக் கூடாது என்ற விதிகளை குறிப்பிட்டுக் கூறியுள்ள அவர், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காப்பாற்றவே இது வகுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மைக்கும், ஊழல் ஒழிப்பு பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் ஆயுக்தாவில் ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்ற விதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழு உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என கொண்டு வரப்பட்டுள்ள விதிக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லோக் ஆயுக்தாவிற்கு நேர்மையான தலைவரை நியமிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு காகிதப்புலி போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்கும் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கையில் கூறியுள்ளார்.