ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவையொட்டி, தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பில், ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், அரசு மருத்துவமனையினர் மற்றும் அலுவல் சாரா அமைப்புகள் மூலமாக தேவைப்படும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விளையாட்டை இணையத்தின் மூலமோ, நேரடியாகவோ பகிர்ந்துகொள்வதை தவிர்க்க வேண்டுமென்றும், இந்த விளையாட்டு மூலமாக பிறரை தற்கொலைக்கு தூண்டுவது சட்டத்துக்கு புறம்பான செயல் என்றும், அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அரசு கூறியுள்ளது. புளூவேல் விளையாட்டை 12 முதல் 19 வயது வரை உள்ள இளைஞர்களே அதிகம் விளையாடுவதாகவும், சிறார்களின் நடத்தையில் மாற்றம் தெரிகிறதா என்பதை கண்காணிக்கவும் பெற்றோர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிறார்களின் உணவு சாப்பிடும் முறையிலும், தூங்கும் முறையிலும் மாற்றம் தெரிகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ப்ளூவேல் விளையாடுவது குறித்து தகவல் தெரிந்தால், உள்ளூர் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.