தமிழ்நாடு

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் விதிமீறல் நடக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்

webteam

அரியர் தேர்வு தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகத்தில் கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்யன், அண்ணாமலை பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் யுஜிசி, ஏ.ஐ.சி.டி.யி பதிலளிக்க உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து வந்த பதில் மனுவில் தமிழக அரசின் உத்தரவால் விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக அரசு கூறியதாவது “ பல்கலைகழக அரியர் தேர்வு அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை. யுஜிசியின் விதிகளை மீறி அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.