திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் , மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால், ராம.ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் CISF வீரர்களின் பாதுகாப்போடு மனுதாரர் 10 பேரை அழைத்துக்கொண்டு மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிவிசன் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF வீரர்கள் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது, இதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார், எனக் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து டிவிசன் அமர்வு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் நூறு வருடமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சனை, மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டமன்ற பிரச்சனையை ஏற்பட்டிருக்கிறது எனவும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.